யாரும் என்னை கூட்டணிக்கு அழைக்கவில்லை; சசிகலாவை சந்திக்க …

யாரும் என்னை கூட்டணிக்கு அழைக்கவில்லை; சசிகலாவை சந்திக்க உள்ளேன்: கருணாஸ்

கருணாஸ் எம்.எல்.ஏ


Web Desk | news18

Updated: March 16, 2019, 8:17 PM IST

தன்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றும்,  நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என விரைவில் தெரிவிக்க உள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும், சசிகலாவை சந்திக்க வாய்ப்பு கேட்டிருப்பதாகவும் கருணாஸ் கூறியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ், “ வரும் 20 ம் தேதி  ஜெனீவா ஐநா சபையில் இலங்கை இனப்படுகொலை பற்றி உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது:

ஜெயலலிதா சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மத்திய அரசு அந்த கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை, எனவே தமிழர் நலனுக்காக தமிழர்களுக்காக அந்த கருத்துக்களை முன் மொழிய நான் செல்கிறேன்.

விடுதலை புலிகள் பலமாக இருந்த போது கடற்கரைகள் பாதுகாப்பாக இருந்தது. இன்று அப்படி இல்லை. சிங்களவர்களின் அட்டூழியங்களை மறைக்கவே கால தாமதம் செய்து வருகிறார்கள். அரசுகளை குறை சொல்ல விரும்பவில்லை. எம் இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

மற்ற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த மக்களுக்கு இங்கே வாக்கு உரிமை வரை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இருந்து வந்த எம் தமிழ் மக்களுக்கு இதுவரை எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.

மோடி அரசால் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். வட மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற முக்கிய காரணம் மோடி எதிர்ப்பே. எந்த கட்சியும் எனது சமூக மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.

Loading…

ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண் கொண்ட சந்தர்ப்பவாத கூட்டணி, இது அவரின் ஆத்மாவிற்கு விரோதமான செயல். நான் இரட்டை இலையில் நின்று வெற்றிபெற்றிருக்கிறேன். வேறு கட்சிக்கு வாக்கு கேட்டால் என் பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரம் தொகுதி கொடுத்தால் எந்த கூட்டணியில் இருந்தாலும் நான் வெற்றி பெறுவேன். என்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. தனியரசும் அழைக்கப்படவில்லை.

ஜெனீவாவில் இருந்து திரும்பியவுடன் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன். பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் செய்வதை விட ஒரு கேவலமான செயல் இருக்க முடியாது. அது தவறான அணுகுமுறை.

இந்த வழக்கை நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை அரசாணையில் வெளியிடுவது தவறு. அது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.

சசிகலாவை சந்திக்க வாய்ப்பு கேட்டிருக்கிறேன். கிடைக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு கருணாஸ் பேசினார்.

மேலும் பார்க்க:First published: March 16, 2019