பறக்கும் படை அதிகாரியாக நடித்து ரூ.1 கோடி நுாதன கொள்ளை

image

சென்னை: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்போல நடித்து, கட்டுமான நிறுவன மேனேஜரிடம் இருந்து ரூ.1 கோடியே 7 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலை சைதாப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருபவர் உதயகுமார் (45). இவர் தொழில் சம்பந்தமாக சென்னை வேப்பேரியில் உள்ள தொழிலதிபரிடம் இருந்து ரூ. 1 கோடியே 7 லட்சம் பெற்றுக்கொண்டு, தனது நிறுவன அக்கவுண்டன்ட் இளங்கோ மற்றும் டிரைவருடன் நேற்று முன்தினம் மாலை காஞ்சிபுரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.  

சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே கார் சென்றபோது, வேகமாக வந்த மற்றொரு கார் வழிமறித்தது. அந்த காரில் இருந்து இறங்கிய 3 பேர், தங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். அதன்பின், காரை சோதனையிட வேண்டும் என கூறி சோதனையிட்டனர்.

அப்போது உதயகுமார் வைத்திருந்த பையில் ரூ. 1 கோடியே 7 லட்சம் இருப்பதை பார்த்ததும், அதற்கு ஆவணங்கள் இருக்கிறதா என கேட்டனர். உதயகுமார், அந்த பணத்தை கடனாக பெற்றுச் செல்வதாக கூறினார். இதை ஏற்க மறுத்து, பணத்தை பறிமுதல் செய்கிறோம். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுக்க வேண்டும். அதனால் நீங்கள் மட்டும் எங்களுடன் வாருங்கள் என உதயகுமாரை தங்கள் காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

பூந்தமல்லியை கடந்து சென்றபோது, திடீரென உதயகுமாரை அடித்து, உதைத்து கீழே தள்ளிவிட்டு பணத்துடன் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து உதயகுமார் கொடுத்த புகாரின்பேரில், சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்த கும்பலை தேடி வருகின்றனர்.அதேநேரம், உதயகுமார் மற்றும் அவருடன் இருந்தவர்கள் நாடகமாடுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டதால் உதயகுமார், அக்கவுண்டன்ட், டிரைவர் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.