காதலர் தினம் கொண்டாடினால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் …

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாட உள்ள நிலையில், எந்த வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என்று பஜ்ரங் தல் அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

காதலர் தினம் :

பிப்ரவரி என்றாலே நம் நினைவிற்கு வருவது வேலண்டைன்ஸ் டே தான். அதாவது காதலர் தினம். பிப்ரவரி 14-ல் ஏன் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதற்கு ஒரு சுவாரஸ்ய கதை உள்ளது. ரோம் நாட்டில் கிளாடியூஸ் என்ற மன்னன் ஆட்சி செய்த போது, இனி யாரும் திருமணம் செய்து கொள்ள கூடாது, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்நாட்டு பாதிரியார் வேலண்டைன் அரசரின் உத்தரவை மீறி இரகசிய திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.

வேலண்டைனின் உயிர் தியாகம் :

அரசர்  கிளாடியூஸிற்கு இது தெரிந்ததால், வேலண்டைனை கைது செய்ததோடு, அவருக்கு மரண தண்டனையும் விதித்தார். இதற்கிடையில் சிறைக்காவலரின் மகள் அஸ்டோயசுடன் காதல் ஏற்பட்டது. இதனால் அவர் தந்தையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் அஸ்டோரியஸ். வாலன்டைன் தன் காதலிக்கு முதல் வாழ்த்து அட்டை செய்தி அனுப்பினார். அந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு வேலண்டைனின் தலை துண்டிக்கப்படுகிறது. அந்த நாள் பிப்ரவரி 14, கி.பி.270. அந்த நாளை காதலர் தினமாக உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடுகின்றனர்.

காதலர் தினம் கொண்டாடக்கூடாது:

நாளை பிப்ரவர் 14-ல் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட உள்ள நிலையில், காதலர்கள் ஹோட்டல்கள், மால்களில் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். இந்நிலையில் பஜ்ரங் தல் என்ற இந்து அமைப்பினர் நாளை ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டத்தில் வேலண்டைனின் உருவபடத்தை எரிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு எந்த வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என்று அனைத்து ஹோட்டல்கள் மற்றும் மால்களுக்கு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளனர். தங்கள் எச்சரிக்கையை மீறி கொண்டாடினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் அந்த அமைப்பினர் பகரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து மிரட்டல் :

காதலர் தினம் கொண்டாடக்கூடாது என்று மிரட்டுவது இது முதல் முறையல்ல. விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் அமைப்பினர் காதலர் தினத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு வன்முறையில் ஈடுபட்டதற்காக அந்த அமைப்பினர் மீது சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அவர்கள் தொடரந்து மிரட்டல் விடுத்துள்ளனர். காதலர் தினம் நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று அதற்கு தடை விதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.