இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடுவின் பந்துவீச்சு குறித்து …

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடுவின் பந்துவீச்சு குறித்து ஐசிசி சந்தேகம் எழுப்பியுள்ளது. 

சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு 2 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எடுக்காமல் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்நிலையில் அவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக நடுவர்களின் அறிக்கை அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகார் தெரிவித்துள்ளது. 

அடுத்த 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு தனது பந்துவீச்சு முறையை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. எனினும், அந்த சோதனை முடிவுகள் வெளியாகும் வரை அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீசலாம் என்றும், விதிமுறைக்கு புறம்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை சரி செய்யும் வரை அவர் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.