கரும்பு விவசாயிகள் போராட்டம் பேச்சுவார்த்தை மீண்டும் …Advertisement

கரும்பு விவசாயிகள் போராட்டம் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கரும்பு விவசாயிகளின் ஆறாம் நாள் காத்திருப்பு போராட்டம், அதிகாரிகள் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் தொடர்கிறது.வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு கரும்பு பாக்கி தொகை 93 கோடியே 46 லட்சத்து 63 ஆயிரத்து 875 ரூபாயை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில், கடந்த 7ம் தேதி காத்திருப்பு போராட்டம் துவங்கியது.தினமும், பல்வேறு நுாதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏ.எஸ்.பி., தீபா சத்யன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று ஏழாம் நாள் போராட்டம் தொடர்ந்தது.அமைப்பின் மாநில தலைவர் அய்யாகண்ணு, தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்திற்கு சென்றதால், மாநில செயலர் சக்திவேல் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது. நேற்று காலை 11:30 மணியளவில், தாசில்தார் கவியரசு, இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், ஆலையின் துணை பொது மேலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்ததும், அலுவலக வேலை நாளில் 28 கோடி ரூபாய் பணம் வழங்குவதாக ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, இதுபோல் பலமுறை உறுதியளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், 10 கோடி ரூபாய்க்கு காசோலை வழங்கினால் தான், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.அதற்கு உறுதியளிக்க முடியாததால், பகல் 12:30 மணியளவில் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது.

Advertisementவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!