என் முதல் தொடரில் நான் மிக மோசமானவனாக இருந்தேன் …

ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் டிவிக்காக முன்னாள் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஆடம் கில்கிறிஸ்ட் எடுத்த பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மனம்திறந்து பேசினார்.

அதாவது ஸ்லெட்ஜிங், களத்தில் கோபமடைவது, ரசிகர்கள் கேலியைப் பொறுக்க முடியாமல் வினையாற்றுவது உள்ளிட்டவை பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

விராட் கோலி கூறியதாவது:

எதுவரை என் எல்லை, எது எல்லை மீறுவது? எங்கு கோடு கிழிப்பது போன்றவை பற்றி எனக்கு நல்ல புரிதலெல்லாம் இல்லை.  அப்படிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் வருந்துகிறேன் என்று கூறவரவில்லை, ஆனால் அவை தவறு என்று நினைக்கிறேன்.

நான் முக்கியமானதாகக் கருதும் தவறுகளைச் செய்யும் போது நான் அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறேன்.  ஆனால் பிறர் கருத்துக்காக நான் எப்போதும் மாற மாட்டேன், நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். நான் வேறொருவராக இருக்க ஒரு போதும் என்னால் முடியாது.

எனவேதான் நான் என் தவறுகளிலிருந்தே திருத்திக் கொள்கிறேன்.  என் தவறுகளை உணர்கிறேன், என் வாழ்க்கைப் பயணத்தில் அவற்றைத் திருத்திக் கொண்டு வருகிறேன்.

கடந்த 2 தொடர்களை விட நான் இப்போது மிகப்பெரிய அளவில் வித்தியாசமானவனாக வந்துள்ளேன். அதுவும் முதல் தொடரில் நான் மிக மோசமானவனாக இருந்தேன்.

நான் ஒருபோதும் துல்லியமாக உருவாக்கப்பட்ட பழைய கிரிக்கெட் பள்ளியைச் சேர்ந்த வார்ப்பு அல்ல , என் வழியை நான் கண்டுபிடித்துக் கொள்கிறேன். என் பயணத்தில் இதுவும் ஒன்று.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.