ஏ.ஆர்.முருகதாஸின் உறவினரும் இலவசப் பொருட்கள் …

ஏ.ஆர்.முருகதாஸின் உறவினரும் இலவசப் பொருட்கள் வாங்கியிருக்கின்றனர்  - தமிழக முதல்வர்

நடிகர் விஜய் | தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி


news18

Updated: November 10, 2018, 8:36 PM IST

சர்கார் படத்துக்கு அதிமுகவினர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால்தான் அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் திரையரங்குகளில் பிரமாண்டமான கட் அவுட்களை வைத்தும், பேனர்கள் ஒட்டியும் ரசிகர்கள் படத்தை வரவேற்றிருந்தனர். ஆனால் படம் வெளியான இரண்டு நாட்களில் ஆளும் கட்சியின் விமர்சனத்திற்கு சர்கார் படம் உள்ளானது.படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பதை எதிர்த்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை எதிர்த்தும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திரையரங்குகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை போராட்டக்காரர்கள் கிழித்து எறிந்தனர். படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மறுதணிக்கை செய்யப்பட்ட பிறகு இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த சர்கார் படக்குழு, “சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்காக ஆளுங்கட்சியினர் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளுக்கு சேதம் விளைவித்தனர். திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கோரிக்கையை ஏற்று படத்தை காண வரும் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன” என்று படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.

Loading…

தமிழக அமைச்சர்கள் மட்டுமே சர்கார் படம் குறித்து கருத்துகளை வெளியிட்டு வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முதல்முறையாக கருத்து தெரிவித்திருக்கிறார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சர்கார் படத்துக்கு அதிமுகவினர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் காட்சி நீக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் கொண்டு வந்த திட்டத்தை கொச்சைப்படுத்துகின்ற போது, அவமானப்படுத்துகின்ற போது தன்மானமுள்ள எந்த ஒரு கட்சிக்காரனும் கொதித்துதான் எழுவான். ஏ.ஆர். முருகதாஸ் உறவினர்கள் கூட விலையில்லா பொருட்களை வங்கி இருக்கின்றனர். அந்தப் பட்டியலை நாங்கள் எடுத்து வைத்திருக்கின்றோம். சில நடிகர்கள் விலையில்லா பொருள் குறித்து தவறான தகவலை பரப்பி வருகின்றனர் ” என்று கூறியுள்ளார்.First published: November 10, 2018