இன்று: உலகை புரட்டிப்போட்ட முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த …

சிறப்புக்கட்டுரை: முனைவரா பா. ஜம்புலிங்கம்

லகை புரட்டிப்போட்ட நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கது முதல் உலகப்போர். இது 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடைபெற்றது. .

17 கோடி வீரர்களையும் பொதுமக்களையும் காவு வாங்கிய உக்கிர போர் இது.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், பசிபிக் தீவுகள், சீனா, தெற்கு மற்றும் வட அமெரிக்காவின் கடற்பகுதிகளில் நடைபெற்ற இந்த உக்கிர போரின் முடிவில் ஜெர்மனி, ரஷ்யா, துருக்கி ஒட்டாமன் மற்றும் ஆஸ்திரிய ஹங்கேரிப் பேரரசுகள் வீழ்ந்தன. ஐரோப்பாவிலும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் புதிய நாடுகள் உருவாயின.

முதல் உலகப்போர் நிறைவுற்றதற்கான ஒப்பந்தம் கையொப்பமிட்டு ஒரு நூற்றாண்டு இன்றுடன் (11.11.2018)  நிறைவு பெறுகிறது. அன்று காலை 5.00 மணிக்கு கையொப்பமிடப்பட்டு, காலை 11.00 மணிக்குச் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை “Eleventh hour of the eleventh day of the eleventh month” என்று கூறுவர். போர் நிறுத்த செய்தி எதிர்நோக்கப்பட்ட விதத்தை அப்போதைய இதழ்கள் வெளியிட்டிருந்தன.

11 நவம்பர் 1918 காலை 11.00 நிகழ்வு தொடர்பாக பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

முதல் உலகப்போரைப் பற்றி ஜவஹர்லால் நேரு தன்னுடைய உலக வரலாறு நூலில் பின்வருமாறு கூறுகிறார். தன் மகள் இந்திரா காந்திக்கு கடித வடிவில் அது அமைந்துள்ளது.

“பெரிய போர் என்றழைக்கப்படும் இந்த உலகப் போரைப் பற்றி (1914-18) நான் என்ன எழுதப்போகிறேன்? நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவையும் ஆசியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளையும்  அழித்ததோடு மட்டுமன்றி இலட்சக்கணக்கான இளைஞர்களின் இன்னுயிரை பலி கொண்டது. போர் என்பதானது ஆரோக்கியமாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்றல்ல. அது அருவறுக்கத்தக்கது. இருப்பினும் அது போற்றப்படுகிறது. …….. …. “(ப.625)

“…நவீன கால போர் என்றால் என்பதைத் தெரிந்துகொள்ள பின்வரும் விவரங்களை உனக்குத் தருகிறேன். போரினாலான இழப்பு பின் வருமாறு அமையும்.

இறந்த வீரர்கள் 10,000,000, இற்ந்ததாகக் கருதப்படுபவர்கள் 3,000,000, இறந்த பொதுமக்கள் 13,000,000, காயமடைந்தவர்கள் 20,000,000, கைதிகள் 3,000,000, போரினால் அனாதையானவர்கள் 9,000,000, போரினால் விதவையானவர்கள் 5,000,000, அகதிகள் 10,000,000. இந்த எண்ணிக்கையைப் பார். அதிலுள்ள மக்களின் வேதனையைப் பார். அனைத்தையும் சேர்த்துக் கூட்டு. இறந்த மற்றும் காயம் பட்டவர்களின் எண்ணிக்கை 46,000,000. பண விரயம்? இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். …….. …. “(ப.639)

முதல் உலகப்போர் நிறைவுற்றபோது போர் தொடர்பான, போர் நடைபெற்ற இடங்கள் குழந்தைகளுக்கு பெயர்களாக சூட்டப்பட்டன.

·  1,634 குழந்தைகளுக்கு முதல் உலகப்போர் தொடர்பான பெயர்கள் இங்கிலாந்து மற்றும் வேல்சில் 1914-1919 காலகட்டத்தில் சூட்டப்பட்டன.

·  901 குழந்தைகளுக்கு வெர்டன் (Verdun) என்ற பெயர் சூட்டப்பட்டது. (21 பிப்ரவரி முதல் 18 டிசம்பர் 1916 வரை ஜெர்மனியப்படைக்கும், பிரெஞ்சுப்படைக்குமிடையே நடைபெற்ற முதல் உலகப்போரின் ஒரு பகுதியாக போர் நடைபெற்ற,  பிரான்சில் உள்ள ஒரு இடத்தின் பெயர் வெர்டன்)

·  166 குழந்தைகளுக்கு கிட்சனர் (Kitchener) 11 குழந்தைகளுக்கு ஹைக் (Haig) என்றும் பெயர் சூட்டப்பட்டன. (உலகப்போரின்போது ஜுலை 1914 வாக்கில் ஆரம்ப கட்டத்தில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் படையின் பெயர் கிட்சனர் படை)

·  120 குழந்தைகளுக்கு வெற்றி (Victory) என்று பெயர் சூட்டப்பட்டன. அவர்களில் 107 பேர் போர் நிறைவுற்றபின் பிறந்தவராவர். 84 குழந்தைகளுக்கு அமைதி (Peace) என்று பெயர் சூட்டப்பட்டது.

·  11 நவம்பர் 1918 அன்றோ, அந்நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளோ பிறந்த குழந்தைகளுக்கு ஆர்மிஸ்டைஸ் (Armistice) என்று பெயர் சூட்டப்பட்டது.

·  10 குழந்தைகள் பச்சென்டாலே (Passchendaele) என்றழைக்கப்பட்டனர். (பெல்ஜியத்தில் 12 அக்டோபர் 1917,  26 October மற்றும் 10 November 1917 ஆகிய காலகட்டத்தில் போர் நடைபெற்ற இடத்தின் பெயர் பச்சென்டாலே)

·  15 குழந்தைகளுக்கு சோமே (Somme) என்று பெயர் சூட்டப்பட்டது. (1918இல் பிரிட்டிஷ், பிரான்ஸ் படைகள் ஜெர்மன் படையை எதிர்த்து இரு முறை போர் நடைபெற்ற இடம் பிரான்சில் உள்ள இடம் சோமே ஆறு அருகில்)

·  71 குழந்தைகள் ஒய்பிரஸ் (Ypres) என்றழைக்கப்பட்டன. (பெல்ஜியத்தில் உள்ள, ஜெர்மனிக்கும் நேசப்படைகளுக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் ஒய்பிரஸ்)

·  மூன்று குழந்தைகளுக்கு ஏமியன்ஸ் (Amiens) என்று பெயரிடப்பட்டன. (8 ஆகஸ்டு 1918இல் தொடங்கி 100 நாள்கள் தாக்குதல் நடைபெற்று, முதல் உலகப்போர் நிறைவுறக் காரணமாக இருந்த இடம் பிரான்ஸில் உள்ள ஏமியன்ஸ்)

முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாக முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய நாட்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. 1.5 மில்லியன் நாட்குறிப்பு பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் 2014 வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 நாட்குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய மூன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விளக்குகின்றன. அதிகாரபூர்வ நாட்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட நாட்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன.முதல் பட்டாலியனின் கேப்டன் ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதி வைத்திருந்த சொந்த நாட்குறிப்பும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது.உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் சூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமாதை ஒட்டி முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த நாட்குறிப்புத் திட்டம் அவர்களது குரல்களை மக்கள் கேட்க வகை செய்யும் என்று கூறப்படுகிறது.

போரில் இறந்த ராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் லண்டனில் ஆயுதப்படை நினைவு நாள் கொண்டாடப்பட்டது. மறைந்த ராணுவ வீரர்களின் கல்லறைகளில் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல் உலகப்போரில் இன்னுயிர் ஈந்தோரை நினைவுகூறும் விதமாக, அதன் நூற்றாண்டு நாளான 2018 நவம்பர் 11 அன்று விடியற்காலையில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் 3,000க்கும் மேற்பட்ட மணிக்கூண்டுகளில் மணி ஒலிக்கப்படவுள்ளது.  உலகம் முழுவதும் இந்த 100ஆவது ஆண்டு நாள் நினைவுகூறப்படுகிறது. முதல் உலகப்போரில் உயிர் துறந்தோரின் உறவினர்களும் நண்பர்களும் நூற்றாண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர்.

போரின் நூற்றாண்டு இந்தியாவில் நினைவுகூறப்படவுள்ளது. இந்தியாவின் பங்களிப்பினை வெளியுலகிற்கு வெளிப்படுத்த இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். அதற்கான முயற்சியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரவை உதவியுடன் யுனைடைட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் மேற்கொண்டுள்ளது.

முதல் உலகப்போர் நூற்றாண்டு நிறைவினையொட்டி வெளிநாட்டில் இந்திய வீரர்களுக்கான இரண்டாவது தேசிய போர் நினைவுச்சின்னம் துணை ஜனாதிபதி எம்.வெங்கய்யா நாயுடுவால் நவம்பர் 11, 2018இல் பிரான்ஸில் திறக்கப்படவுள்ளது.

பெல்ஜியத்தில் போரிட்ட 1,30,000 இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில் முதல் நினைவுச்சின்னம் அங்கு யைப்ரஸ் என்னுமிடத்தில் 2002இல் வடிவமைக்கப்பட்டது. அவர்களில் 10,000 வீரர்கள் போர்க்களத்தில் உயிர் துறந்தனர்.

1970களில் பதியப்பட்ட, இந்திய வீரர்களின் சுமார் 1,000 பக்கங்கள் அடங்கிய பேட்டியின் கையெழுத்துப்படிகள் பிரிட்டிஷ் நூலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் போரில் கலந்துகொண்ட பெரும்பாலும் கல்வியறிவற்ற, வட இந்தியாவைச் சேர்ந்த 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட இந்திய வீரர்கள் நடத்தப்பட்ட மோசமான விதம், கசையடி, விடுப்பிற்கான அனுமதி மறுப்பு, இன அடிப்படையில் வேறுபாடு உள்ளிட்ட நெஞ்சை உருக்குகின்ற நிகழ்வுகள் இதில் பதியப்பட்டுள்ளன.

துணை நின்றவை

விக்கிபீடியா, முதலாம் உலகப்போர்

Glimpses of World History, Jawaharlal Nehru, Jawaharlal Nehru Memorial Fund/Oxford  University Press, 15th Impression, 1999

முதல் உலகப்போர் நூற்றாண்டு தினம் அனுசரிப்பு, தினமலர், 6 ஆகஸ்டு 2014

Soldiers’ relatives mark centenary of first world wars forgotten battle, Guardian, 7 Aug 2018

Bells will ring out: world to mark end of first world war, 100 years on, Guardian, 12 Aug 2018

Indians in the trenches : voices of forgotten army are finally to be heard, Observer, 27 October 2018

The forgotten million : on Indian soldiers in World War I, The Hindu, 6 November 2018

லண்டனில் முதல் உலகப்போர் முடிவின் 100வது ஆண்டு நிறைவு நாள் அனுசரிப்பு, தினகரன், 8 நவம்பர் 2018

A sacrifice remembered, The centenary of the First World War has provided a welcome opportunity to recognise India’s role, The Hindu, 9 November 2018

English Summary
Today is the day when World War I ended the world